களனிப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமனம்!

களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தற்போதைய துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சுற்று நிருபத்துக்கமைய நடாத்தப்பட்ட தெரிவில் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா முதனிலை பெற்று அடிப்படையில், களனி பல்கலைக்கழகப் பேரவையினால் அவரது பெயர் ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்மொழியப்பட்டிருந்தது.

அதேபோல, ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வெற்றிடமாகவிருந்த துணைவேந்தர் பதவிக்காக நடாத்தப்பட்ட தெரிவிலும் முதனிலை பெற்றிருந்த உயர் பட்டக் கற்கைககள் பீடப் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நேற்று 26 ஆம் திகதி முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 12 ஆம் திகதி துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவைக் கூட்டம் நடாத்தப்பட்டு, பேரவையினால் மூன்று பேரது பெயர்கள் ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!