கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றுக் காலையில் கிளிநொச்சியில் இருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழுவொன்றால் அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்ற போது, தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகர் மஹிந்த யாப்பாவைத் தொடர்பு கொண்டு அங்கு பிரசன்னமாகியிருக்கும் பொலிஸார் கைது செய்வதற்கான எந்தவிதமான ஆவணங்களும் இன்றி வருகை தந்துள்ளனர் எனவும், தன்னை இன்று மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்குமாறும் தான் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம் சம்பந்தமாகச் சபையின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும், அவர் கூறினார். எனினும், அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரைத் தான் கைது செய்திருப்பதாகவும். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வாக்கு மூலம் அளிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரினார்.
அப்போது. கஜேந்திரகுமார், தான் கைது செய்யப்பட்டமைக்கு ஆதாரமாகப் பொலிஸார் வழக்கமாக வழங்கும் துண்டை ஆவணத்தை வழங்குமாறு கோரினார். எனினும், அதனை வழங்கு வதற்கான புத்தகத்தைக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்த பொலிஸ் அதிகாரி அவரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் குழப்பம் இன்றித் தன்னுடன் வருகை தருமாறும் அழைத்தார்.
சபாநாயகரின் அறிவுறுத்தலுக்குப் பின்னரரும் பொலிஸார் தன்னைச் சட்டவிரேதமாகக் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்த கஜேந்திரகுமார், நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை விவகாரத்தினை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்காகப் பொலிஸார் இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். அதன் பின்னரர் பொலிஸாருடன் செல்வதற்கு தீர்மானித்தார். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்பின்னர் அங்கிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதன்பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிவானிடம் முற்படுத்தப்பட்டார். நீதிவான் அவருக்குப் பிணை வழங்கியதோடு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கினார்.
இதேவேளை, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய் யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பிணையில் விடு விக்கப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் குறித்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி ஜெ.சற்குணதேவி, எஸ்.உதயசிவம் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.